அச்சிடுக

உணவு பாதுகாப்பு மசோதா - சாதகம் பாதகங்கள் என்ன?

Posted in கட்டுரை / விமர்சனம்

பயனாளர் மதிப்பீடு:  / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் அரசாங்கம் இந்த உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆராயமாமல் அமல் படுத்துவது சாத்தியமல்ல என்ற விவாதம் எழும்பியது மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் இதை சில திருத்தங்களுடன் அமல் படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது. சில மாநில அரசுகள் இச்சட்டம் மாநில சட்ட வரம்புகளுக்க எதிரானது என்றும் இது போன்ற அடிப்படை உரிமைகள் சார்ந்த அம்சங்களை மாநில அரசுகளின் கீழ் விட்டுவிடவேண்டும் என்றும். இது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.

மேலும் பொது வினியோகத்திட்டத்தில் உள்ள குளறுபடிகள், உணவு பற்றாக்குறை மற்றும் உணவு இறக்குமதி உள்ளிட்ட அம்சங்களும் இந்த விவாதத்தில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் கடந்த வாரம் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பாதுகாப்பு மசோதா என்றால் என்ன ?

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளவர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே உணவு பாதுகாப்பு சட்டமாகும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களானது நலத்திட்டங்களின் அடிப்படையிலானது அதாவது welfare based. ஆனால் இம்மசோதா மூலம் உரிமை அடிப்படையிலானதாக அதாவது rights based ஆக மாறுகிறது. அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டம் போல் நலத்திட்டங்களை அறிவிப்பதை போல் அல்லாமல் தேவைப்படும் மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது அரசின் கடமையாகிறது.  இந்தியாவின் மக்கள் தொகையில் 63.5% பேர் இம்மசோதா மூலம் பயன்பெறுவர். பெண்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், இயற்கை பேரழிவுக்கு ஆளானோர், பட்டினியால் வாடுபவர்கள் என அனைவரும் உணவு பெற சட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்படும் விதம்

நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி பொதுவிநியோக முறை மூலம் பயன்பெறுவோர் முன்னுரிமை பிரிவினர், பொதுப்பிரிவினர் என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னுரிமைப்பிரிவினர் எனும் வறுமைகோட்டுக்கு கீழ் வரும் ஒவ்வொரு தனி மனிதனும் மாதம் ஒன்றுக்கு 7 கிலோ உணவுப்பொருட்கள்  அதாவது அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், சிறுதானியங்கள் கிலோ  ஒரு ரூபாய்க்கும்  பெறுவதற்கு உரிமை வழங்கப்படும்.

பொதுப்பிரிவு குடும்ப அட்டைதாரர்களில் ஒவ்வொரு நபரும் மாதம் ஒன்றுக்கு மூன்று கிலோ உணவுப் பொருட்களை  பெறுவார்கள்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் 75% பேரும் (இவர்களில்  46% பேர் முன்னுரிமை பிரிவினர் ), நகர்ப்புறங்களில் 50% பேரும் (இவர்களில் 28% பேர் முன்னுரிமை பிரிவினர்) மானிய விலையில் உணவுப்பொருட்களை பெறுவர்.

சர்ச்சைகள்

பொதுவாக எந்த ஒரு திட்டம் கொண்டுவரும்போதும்,  அதனை வரவேற்கும் அம்சங்களை காட்டிலும் சர்ச்சைகளும் ஏற்ப்படுவது போல் இத்திட்டத்திலும் உள்ளது.

 • முன்னுரிமை பிரிவினர், பொதுப்பிரிவினர் என இருவகையாக பிரிக்கப்பட்டிருந்தாலும் பயனாளிகள் யார் என்று அடையாளம் காட்டப்படவில்லை.
 • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு மத்திய அரசு வைத்துள்ள சில கணக்கீடுகள் இந்த மசோதா புறக்கணிக்கிறது.
 • மத்திய அரசின் கணக்கீடு படி ஏழை குடும்பங்களின் எண்ணிக்கை 6.52 கோடி. இதுவே மாநில அரசுகளின் கணக்கீடு படி 11.03 கோடி . இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 56 சதவீதமாகும். ஆனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கிராமப்புறங்களில் 46%, நகர்புறத்தில் 28% என மசோதா கூறுகிறது. இது போன்ற குழப்பத்தால் மசோதாவின் பயன் அனைத்து ஏழை மக்களுக்கும் சென்றடையுமா என்ற சந்தேகம் எழுகின்றது.
 • நாட்டின் 67% மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது கிராமப்புறத்தில் வசிக்கும் 75% குடும்பத்தினருக்கும் நகர்புறத்தில் வசிக்கும் 50% குடும்பத்தினருக்கும் இச்சட்டத்தின்மூலம் மலிவு விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த வேறுபாடு அனுமதிக்கப்பட்டது?
 • ஆண்டுக்கு 21.88 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோவுக்கு ரூ.3 வீதத்தில் வழங்க வகை செய்துள்ள மத்திய அரசு, மீதமுள்ள 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கான விலையை திருத்தத்தில் குறிப்பிடவில்லை. (தமிழக அரசு)
 • இந்தச் சட்ட மசோதாவை முழுமையாக அமல்படுத்தத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் உரிய நேரத்தில் செய்தால்தான் எல்லா அம்சங்களையும் நிறைவாக பூர்த்தி செய்ய முடியும். இதை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியாது.
 • முற்றிலும் மையப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தச் சட்ட மசோதா. மாநில அரசுகளுக்குப் போதுமான அளவில் தன்னாட்சிக்கு எந்தவிதத்திலும் வாய்ப்பில்லை.
 • போர்க் காலம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புயல் பாதிப்பு, நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைகளில் மக்களுக்கு உணவு அளிப்பதற்கு இந்தச் சட்டத்தில் இடமில்லை.
 • உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு போதிய அளவில் கட்டமைப்பு வசதி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இல்லை.  ஏற்கெனவே ஒவ்வொரு ஆண்டும் சேமிப்புக் கிடங்குகளில் நூற்றுக்கணக்கான டன் உணவுப் பொருள்கள் அழுகி, வீணாகிப்போகின்றன.
 • முன்னதாக, கேரளா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம் (ஜூலை முதல்), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்கள் மலிவு விலையில் உணவுப் பொருள்களைப் பெரும்பாலான மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தப் புதிய மசோதா சட்டமானால் அது எந்த வகையில் கூடுதல் பலனளிக்கப்போகிறது?

அரசு என்ன சொல்கிறது?

 • உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் 67%  ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
 • 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.
 • திட்டத்தைச் செயல்படுத்த 1.3 லட்சம் கோடி செலவாகும் என்பது தொடக்ககால மதிப்பீடு.
 • நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உணவு பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டம் மூலம் கொண்டுவரவேண்டும் அல்லது சிறப்பு நாடாளுமன்றக்கூட்டத்தின்மூலம் உணவு சட்டமாக்கவேண்டும்.

உணவு பாதுகாப்பு மசோதா : முக்கிய அம்சங்கள்

 • அனைவருக்கும் குறைந்த விலையில் சுகாதாரமான உணவு போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
 • கிராமப்புறங்களைச் சேர்ந்த 75% மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50% மக்கள்.
 • எப்படி விநியோகிக்கப்படும்? பொது விநியோக முறை மூலம் தானியங்கள் மக்களைச் சென்றடையும்.
 • 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப இலவச உணவு அளிக்கப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கும் இலவச உணவு அளிக்கப்படும்.
 • திட்டத்தை மேற்பார்வையிட ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக உணவுப் பிரிவு ஏற்படுத்தப்படவேண்டும்.
 • மசோதாவில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. ஷெட்யூல் 1: செலவுகள். ஷெட்யூல் 2 : ஊட்டச்சத்து அளவுமுறைகள். ஷெட்யூல் 3 : உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள்.
 • தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட நகல், 2013 முழுமையான வடிவம் : http://tinyurl.com/pv3puc2

 சில கணக்குகள்

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு இண்டர்நேஷனல் ஃபுட் பாலிஸி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்  அமைப்பைச் சேர்ந்த பி.கே. ஜோஷி அளித்த பேட்டியில் இருந்து சில தகவல்கள்.

 • அரிசி ஒரு கிலோ 3 ரூபாய், கோதுமை 2 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும். ஒவ்வொருவரும் எவ்வளவு தானியம் பெறவேண்டும் என்பதை மாநில அரசு முடிவு செய்யும்.
 • திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தோராய செலவு, ஜிடிபியில் இருந்து 1.1% வரை ஆகும். ஆனால் அரசால் இந்த அளவுக்கு நிதி ஒதுக்கமுடியுமா என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு, ஒரு கிலோ அரிசி வாங்க அரசு 18 ரூபாய் செலவிடவேண்டியிருக்கும்.
 • இந்தத் திட்டத்தின்படி ஆண்டுக்கு 62 மில்லியன் டன் தானிய உற்பத்தி செய்யமுடியும் என்பது அரசின் வாதம். மானியத்தின் மதிப்பு 24 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 • விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கொள்முதல் விலையும் அதிகரிக்கும். அப்போது மானியத்துக்கான செலவும் அதிகரிக்கும்.  தானியங்களின் விலை கூடவில்லை என்றாலும்  மக்கள் தொகை எண்ணிக்கை கூடுவே செய்யும். அந்த வகையில், நிதிச்சுமையும் கூடும். எனவே இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது சிரமமானது.

இப்படி பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் உணவு பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்பட்டு டெல்லி மாநிலத்தில் நடைமுறை படுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் காங்கிரஸ் அரசாங்கம் எடுத்து வருகிறது. இது தொடர்பான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட்டிகள்

ஆழம் http://www.aazham.in/?p=3412

தமிழ்நாடு http://www.a2ztamilnadu.com/tamilnews/food-protection-act-2011/

Latest News